தாய் மண்ணே வணக்கம்🙏🏼4.3'22



தாய் மண்ணே வணக்கம்🙏🏼

தாய்மண் என்றால் நாம் பிறந்த பாரத தேசம்தான் என்பது என் கருத்து. நான் பிறந்த மண் கோவில்களுக்கும் திருவிழாக்களுக்கும் மட்டுமா...தங்கம், வெள்ளி, பித்தளை, ஈயம் போன்ற பாத்திரங்களுடன் பட்டுப். புடவை, பாரம்பரியம் என்று பலவற்றிற்கும் உலகம் முழுதும் புகழ் பெற்ற கும்பகோணம். 


நான் பிறந்தது குடந்தையில் பக்தபுரித் தெருவிலுள்ள பஹோலா பார்மஸி என்ற வீட்டில். நான் பிறந்த சமயம் அது ஹோமியோபதி மருத்துவமனையாக இருந்ததாம். அதன் பின்பக்கம் இருந்த வீட்டில் என் தாத்தா குடியிருந்தார். அங்கு பணி புரிந்த நர்ஸ்தான் என் அம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தாராம். அதன்பின் மருத்துவமனை விரிவுபடுத்தப் பட்டபோது எதிர் வீட்டிற்கு மாறிவிட்டார்கள். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது இன்றும் எனக்கு என் அம்மாவின் நினைவு வரும்.


விடுமுறைகளுக்கு அங்கு போவதோடு சரி. என் அப்பா வங்கி அதிகாரியானதால் மாறுதல் வந்து கொண்டே இருக்கும். எட்டு ஆண்டுகள் சீர்மிகு சென்னையில் இருந்தபோது சென்னை முழுதும் பெற்றோரோடு சுற்றிப் பார்த்த நினைவுகள் மறக்குமா!


அப்பாவுடன் ஐந்தாறு ஊர்கள், பின் திருமணத்திற்கு பின் கணவரோடு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலும் வாழ்க்கை. இதில் எந்த இடத்திலுமே மனது ஈர்க்கப்படவில்லையோ என்று தோன்றும்! வாழ்ந்த எல்லா ஊருமே அந்தந்த காலத்திற்கு சொந்த மண்ணாக இருந்தது என்பேன்!


பெண் பிள்ளைகளுக்கு திருமணமானபின் பல நாடுகள் சுற்றியாச்சு! அந்த நேரங்களில் நம் நாட்டுக்கு திரும்பும் நாள்தான் தாய்மண் மேல் நமக்கு இருக்கும் ஒட்டுதலை அறியச் செய்யும்! நம் நாட்டு விமான நிலையத்தை மிதித்ததும் ஒரு குதூகலமும் உற்சாகமும் வந்து...சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா...என்ற உணர்வு தோன்றுமே, அதுதான் தாய்மண்ணின் அருமையை உணர்த்தும் நேரம்!


என் கணவர் குடந்தை அருகில் உமையாள்புரத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால் குடந்தையில் வீடு வாங்கி செட்டில் ஆகலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி தற்சமயம் குடந்தை வாசம்! எப்படியோ காவிரி ஓடும் மண்ணில் பிறந்து அதே காவிரிக் கரையில் வாழ்வது ஒரு வரம்தானே!



Comments

Popular posts from this blog

தந்தையர்_தினம்..19.6.'22

மகத்தான உறவு மாமா...11.6.'22

குறளும்_கதையும்..19.6.'22