குறளும்_கதையும்..19.6.'22

 "ThemeOfTheWeek

குறளும்_கதையும்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

தந்தையின் கனவு..

..ஏய் சரசு..அங்கன என்ன வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கிற? சீக்கிரம்  ஓலையை எடுத்துக் கொடு. மழை வந்துச்சுன்னா இன்னைய பாடும் திண்டாட்டமாயிடும்..

சின்னராசு அவசரப் படுத்தினான்.


..எனக்கும் வயசாகாதுல்ல. மெதுவாதான வேலை செய்ய முடியும். ராசாவாட்டம் ஆம்பளை புள்ளையைப் பெத்திருக்கோம். பிற்காலம் சொகமா இருக்கலாம்னு நினைச்சேனே? எல்லாம் கனவா போச்சு..


..அட. அழுவாத சரசு. நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான். அவன் என்னை மாதிரி கஷ்டப்படாம பெரிய வேலைக்கு போய் நல்லா சம்பாதிச்சு பெரிய பேரு வாங்கி உயர்வா வாழணும். என் பிள்ளையால எனக்கு நல்ல பேர் கிடைக்கணும்னு நினைச்சுதான நம்ம  வீட்டை வித்து அவனைப் படிக்க வெச்சோம். எப்படியோ அவன் நல்லா இருந்தா சரி..


..இப்படி ஒரு நல்ல அப்பாவை அவனுக்கு பெருமையா வெச்சுக்க தெரியலையே. ஒரு அப்பாவா உங்க கடமையை சரியா செஞ்சுட்டீங்க.வருத்தப் படாதீங்க அவனும் ஒருநாள் உணர்ந்து வருவான்..


கண்கலங்கினாள் சரசு. என்ன ஆனாலும் பெண்ணாயிற்றே?


ஒருவழியாக வைக்கோலைப் பரப்பி வேலையை முடித்த சின்னராசு கீழே இறங்கி சாப்பிடப் போனான். 

சற்று  கண்ணயர்ந்தவர்களை 'அம்மா' என்ற குரல் எழுப்பியது. 'யாரது?' என்றபடி வாசலில் வந்த சின்னராசு தன் கண்களையே நம்ப முடியாமல்..சரசு யார் வந்திருக்கா பாரு..என்று கூப்பிட்டான். 


..கதிர் எப்படிப்பா இருக்க? உன் பெண்டாட்டியை கூட்டிக்கிட்டு வரலயா?..


..அம்மா உங்களை இங்கு தனியா தவிக்கவிட்டு போன பாவத்துக்கு பலனை அனுபவிச்சுட்டேன். கொரோனா வந்ததுல என் வேலை போயிடுச்சு.அவளுக்கு என்னோட வாழப் பிடிக்கலனு விவாகரத்து வாங்கிட்டு போய்ட்டாம்மா.நீங்க வருத்தப் படுவீங்கனுதான் உங்ககிட்ட சொல்லல..

சொல்லியவன் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து நின்றான்.


..வாடா ராசா. உனக்கு நாங்க இருக்கோம். கவலைப் படாத. வேற வேலை கிடைக்கும்பா உனக்கு..


..இல்லம்மா. இனி நான் வேலைக்கு போறதா இல்ல. நம்ம நிலத்தில விவசாயம் பண்ணி உங்க கூடவே இருக்கப் போறேன்மா..


சின்னராசு கண் கலங்கினான்.

..ஏம்பா நீ இப்படி கஷ்டப்பட வேண்டாம்னுதானே உன்னை பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சேன். நீ பள்ளி முதலாகவும் பிறகு காலேஜ்ல முதலாகவும் வந்தப்ப நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன். வெளிநாட்டுல வேலை கிடைச்சு போனப்பவும், உனக்கு பிடிச்ச பெண்ணைக் கட்டிக்கிட்டப்பவும் 'நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்'னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன்பா.மறுபடியும் நல்ல வேலை கிடைக்கும். முயற்சி பண்ணுப்பா..


 ..அப்பா உங்க கடமையை செய்துட்டீங்க. இனி மகனாகிய நான் என் கடமையை  செய்யணும்பா. உங்களை கவனிக்காம இருந்ததற்கான தண்டனை எனக்கு கிடைச்சிடுத்துப்பா.நான் வெளிநாடு போனப்ப விவசாயத்தில நவீன முறைகளையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். இப்போ விவசாயத்தில் நிறைய முன்னேற்றங்கள் இருக்குப்பா. அதல்லாம் செஞ்சு நாம் நிறைய சாதிக்கலாம். உங்களைப் பெருமை படுத்த வேண்டியது என் கடமைப்பா. என்னை மன்னிச்சுடுங்க ரெண்டு பேரும்..எனக் காலில் விழுந்தான் கதிர்.


..நல்லா இருப்பா..கண்கள் கலங்க அவனை வாழ்த்தினார்கள் இருவரும்.


Comments

Popular posts from this blog

தந்தையர்_தினம்..19.6.'22

மகத்தான உறவு மாமா...11.6.'22