தந்தையர்_தினம்..19.6.'22

 


தந்தையர்_தினம்

அப்பா...அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது. என் அப்பாவுக்கு என்னிடம் ரொம்ப ஆசை என்பார் என் அம்மா. முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் பின் மூன்று சகோதரர்கள் பிறந்தாலும், என் அப்பாவுக்கு என்னிடம் தனிப் பாசம் உண்டு என்பதை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கிறேன். 


சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு,திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்! 


எனக்குத் திருமணம் நடந்த அன்று, அவர் மடியில் அமர்ந்து எனக்கு திருமாங்கல்ய தாரணம் செய்தபோது என் அப்பா கண்  கலங்கி அழுதது இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது. அதை நினைக்கும்போது இன்றும் என் கண்கள் கண்ணீரால் நிறைகிறது.


பிள்ளைகளிடம் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தந்தைகள், பெற்ற பெண்ணிடம் சற்று விட்டுக் கொடுத்துப் போவது எனக்கு மட்டுமல்ல.. பல பெண்களின் அனுபவமாக இருக்கும். பாசத்தில் பாரபட்சமா? இல்லை...அது ஒரு தனிப்பட்ட அன்பு எனலாம். 


நான் ஒரே பெண் என்பதால் அப்பாவுக்கு இத்தனை பாசமா என்று நான் நினைப்பதுண்டு. என் அம்மாவுடன் நான்கு பெண்கள் என் தாத்தாவிற்கு. நான்கு பெண்களிடமும் அவருக்கு தனிப்பட்ட பாசம் உண்டு என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். பல பெண்களும் அம்மாவைவிட அப்பா செல்லமாக இருப்பதைக் காணலாம்!


அம்மா என்கிறபோது உருகும் மனம், அப்பா எனும்போது ஒரு அதீதமான வாஞ்சையை அனுபவிப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது.👨‍👧


என் அப்பாவின் உடல்நிலை மோசமாகி மருத்துவ மனையில் சேர்த்திருந்த போது,கிட்டத்தட்ட 22 நாட்கள் அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்தது என்னால் மறக்க முடியாத நாட்கள்.


இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை இன்றும் சிறப்பாக  வாழவைப்பதை உணர்கிறேன்.


இந்தத் தந்தையர் தினத்தில் என் பிரியமுள்ள அப்பாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன்.🙏


Comments

Popular posts from this blog

தந்தையர்_தினம்..19.6.'22

மகத்தான உறவு மாமா...11.6.'22

குறளும்_கதையும்..19.6.'22