கல்யாணமாம்_கல்யாணம்..1.4.'22


Theme_of_the_week

#கல்யாணமாம்_கல்யாணம்

பங்குனி கல்யாண மாதம் என்றதுமே மனம் பரவசமாயிடுத்தே! ஆமாம்.. என் கல்யாணமும் இதே மாதம்தானே நடந்தது! 45 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 5ந்தேதி நடந்த திருமணம்...அந்த நாள் முறைப்படி வரதட்சணை..வைர மூக்குத்தி..இத்தனை பவுன் நகைகள்..வெள்ளி பித்தளை பாத்திரங்கள்..என்று சாங்கோபாங்கமாக நடைபெற்ற கல்யாணம்! 


என் அப்பா வங்கி அதிகாரி. நாங்கள் அச்சமயம் முசிறியில் இருந்ததால், நாங்கள் குடியிருந்த வீடே சத்திரம் போல் பெரிய்...ய வீடு. அதிலேயே திருமணம். இந்த நாளைப் போல் விதவிதமான புடவைகள்...வேளைக்கு ஒரு அலங்காரம்.. ப்யூட்டி பார்லரில் ஆளையே மாற்றும் மேக்கப்..மாலை ரிசப்ஷன்..ம்ஹூம்..எதுவுமே இல்லாத பாரம்பரிய அந்நாளைய திருமணம்!


பெண் பார்த்த பின்பு மூன்று மாதங்களுக்கு பின்பே கல்யாணம். அவர் முகமே சுத்தமாய் மறந்து போய், நிச்சயதார்த்தத்தன்று பார்த்தபோது ...அட இந்த ஆசை முகம் மறந்து போச்சே...என்று பாடத் தோன்றியது!


மாப்பிள்ளை அழைப்பு காரில் என்னையும் உட்காரச் சொல்லி என் கணவரின் நண்பர்கள் சொன்னபோது, எங்கள் இரு பக்கத்து தாத்தாக்களும் அனுமதிக்காததால், பாவமாக என் கணவர் மட்டுமே ஊர்கோலம் சென்றார்! 

என் புக்ககம் திருச்சி. நாங்கள் திருச்சிக்கு காரில் திரும்பியபோது குணசீலம் பெருமாள் கோயில் வாசலில் கார் ரிப்பேர் ஆகி எங்களை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள்  தடுத்தாட் கொள்ள, அற்புதமான தரிசனம்! அதன் பலனாக இன்றுவரை அவரது அருளால் பயணம் இனிதாக தொடர்கிறது!

தேன் நிலவுக்கு தடா!! வான் நிலவை மட்டுமே பார்த்து மகிழ்ந்த எங்களுக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்துவிட, எந்த இடத்துக்கு சென்றாலும் புக்ககத்தார் மற்றும் குழந்தைகளோடு கையில் சாப்பாடு தண்ணீர் சகிதம் சென்ற நாங்கள் தனியாக, ஜாலியாக ஊட்டிக்கு தேன்நிலவு சென்றது 12 வருடங்களுக்கு பின்பே!!

'பிரேமையில் யாவும் மறந்தோம்' என்று அன்றுமுதல் இன்றுவரை மாறாத அன்போடும், மங்காத காதலோடும், பெண்,பிள்ளைகளின் பாசத்தோடும், பேரன் பேத்திகளின் நேசத்தோடும் என்றும் இந்த வாழ்க்கை தொடர இறைவனை வேண்டுகிறேன்🙏🏻



Comments

Popular posts from this blog

தந்தையர்_தினம்..19.6.'22

மகத்தான உறவு மாமா...11.6.'22

குறளும்_கதையும்..19.6.'22